மனத்திரை முதல் கணித்திரை வரை

1975ஆம் ஆண்டு தன் பணியை ஆரம்பித்த க.குணசேகரன் படைப்புகள் ஸ்வப்னா, நிலாமகன், நண்பன், தாகூர் தாசன், குசும்பன், குணா, குறும்பன், அனலைசர் போன்ற புனைபெயர்களிலும் க.குணசேகரன் என்ற இயற்பெயரிலும் வெளியாகியுள்ளன.

திரு.க.குணசேகரன் இருப்பதைந்து ஆண்டுகளுக்கு மேலாக இதழியல் துறையில் சீர்த்த அனுபவம் பெற்றவர். எதையும் வரலாற்று உணர்வோடும், நுணுக்கமான ஆய்வுத் திறனோடும் பார்க்கும் தகுதிப் படைத்தவர் என்பதற்கு இந்நூலே சான்றாகும். நாம் வாழும் இன்றைய யுகம் தகவல் பரிமாற்றத் தொழில் நுட்ப யுகம் என்று சொல்வது மிகையாகாது. இந்நூலைப் படிக்கும் போது இந்த யுகத்தின் குரல் போன்று ஒலிக்கிறார் நூலாசிரியர். "எழுத்தாளன் என்பவன் அவனது சகாப்தத்தின் ஊதுகுழல் ஆவான். அவன் பழமையை ஆழமாகத் தெரிந்து கொண்ட பின்புதான் நிகழ்காலத்தில் தன் சமுதாயத்தின் முன்னுள்ள கடமைகளை வரையறுக்க முடியும். மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை உணர அவர்களது பழமொழிகளையும், கதைகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்" என்று ரஷ்ய அறிஞர் மாக்ஸிம் கார்க்கி குறிப்பிட்டிருக்கும் அளவுகோல் படிப்பார்த்தால் ஆசிரியர் க.குணசேகரன் ஒரு திறன் படைத்த எழுத்தாளர் எனலாம்.

எட்டு அதிகாரங்கள் உள்ளடக்கிய இந்நூல் "மனத்திரை முதல் கணித்திரை வரை" எனும் பொருத்தமானத் தலைப்போடு அறிவு பரிமாற்றத்தின் தோற்றுவாயிலிருந்து இன்றையத் தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான அவதாரம் வரை படிப்போரின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஊக்குவிக்கும் வண்ணம் பல விவரங்களை வரலாற்று ஆதாரங்களோடு வழங்கியிருப்பது மெச்சதக்கதாகும். அச்சிடும் இயந்திரங்களின் வருகையால் தமிழ் மண்ணில் ஏற்பட்ட சில திருப்புமுனை மாற்றங்கள்: 17ம் நூற்றாண்டில் வெளிவந்த தமிழ் அச்சுநூல்கள் மற்றும் புகழ் பூத்த பதிவாளர்கள்: அச்சுத் தொழில் நுட்பத்தால் இதழியலுக்கு ஏற்பட்டத் தாக்கம் - இவைப் பற்றியெல்லாம் ஆசிரியர் விவரித்துள்ளார். நூலின் ஆறாம் அதிகாரத்தில் இதழியலின் வளர்ச்சிப் பற்றியும் எழுத்து சீர்திருத்தத்தில் தந்தைப் பெரியாரின் முக்கியப் பங்களிப்புகள் பற்றியும்,கருத்துச் சுதந்திரம் பற்றியும் ஆசிரியர் கூறியுள்ள பலக் கருத்துக்கள் சிந்தனைக்குரியவையாகும். "கல்வியினால் மக்களுக்கு முறைப்படி வரும் ஒழுக்கம், நல்லறிவு ஆகியவற்றை பல்சுவைப் பத்திரிக்கைகள் கெடுத்து விடுகின்றன. இனக்கவர்ச்சிக்கும், பரப்பரப்பிற்கும் இடம் தராது முறையான செய்திகளுக்கு முதலிடம் தரும் பத்திரிக்கையே தரமான பத்திரிக்கையாகும்" நார்த்க்ளிப் என்னும் எழுத்தாளரின் இந்த உயர்வானக் கருத்தை ஆசிரியர் குறிப்பாக எடுத்துக் கூறியுள்ளது இன்றைய இதழியல் ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் அறிவுரையாகும். தமிழ் எழுத்துச் சீரமைப்பை வலியுறுத்தியோரின் வரலாற்றுச் சிறப்புப் பெற்றத் தொண்டுப் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது பொருத்தமாக அமைந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் அச்சுத்துறையில் கணியத்தொழில் நுட்பம் ஆழமாக ஊன்றிவிட்டதைக் குறிப்பிட்டு விட்டு இதைத் தொடர்ந்து இணையம் வழியில் தகவல் பரிமாற்றம், தகவல் பதிவு விளம்பரம் போன்றவை உலகளாவிய வகையில் பரவியிருப்பதை ஆசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். கணியமும் இணையமும் இன்று மக்கள் வாழ்வில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பயனளித்து வருவதை நாம் மறுக்க முடியாது. இதையொட்டி புதிய புதிய உத்திகள், படைப்புகள், கருவிகள் தோன்றுவதை நம்மால் தடுத்து விட முடியாது. இருப்பினும் நம்மிடம் இயற்கையாகப் பொதிந்துள்ள நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் படைப்புத்திறமை ஆகியவை வலுவிழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றைய தலைமுறையின் தலையாயக் கடமையும் பொறுப்புமாகும்.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள், செய்தி விமர்சனங்கள், சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றுள்ள ஆசிரியர் க.குணசேகரனின் இந்நூல் அவருடைய ஆய்வுத்திறமையை பளிச்சிடச் செய்கிறது. படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் கருத்துக் கருவூலமாகவும் திகழ்கிறது. இதைத் தமிழகத்து கற்றறிந்தோர், குறிப்பாகக் கல்வித்துறையினர், இதழியலாளர், தகவல் தொழில்நுட்ப உலகைச் சார்ந்தோர் ஆகியோர் படித்து இன்புறுவர் என்பது என் நம்பிக்கை மற்றும் தமிழ்ச் சுரங்கத்தின் புதியவரான இந்நூலை வளரும் இளைய சமுதாயம் படித்து உற்ற பயனை அடைய வேண்டும் என்பது என் விருப்பமாகும்.



© 2006 Kaniyatamil Software