கணியத்தில் தமிழைப் பயன்படுத்துவோர் இன்று எதிர்நோக்கும் அடிப்படைச் சிக்கல்கள் யாவற்றையும் தீர்த்து வைக்கும் தமிழ் மொழித்தளமே வரியுருமா ஆகும்.
ஆங்கில மொழியை எழுதப் பயன்படுத்தப்படும் ரோமன் எழுத்துகளில் எழுதப்படும் மேலைத்தேச மொழிகளைக் கணியத்தில் பயன்படுத்துவதற்கு வேண்டிய அடிப்படைகளை இயங்குதளமே வழங்கி விடுகிறது.
ஆனால் ஆங்கிலம் சாரா மொழிகளைக் கணியத்தில் பயன்படுத்தும்போது அவற்றுக்கெனத் தனியான ஒரு தளம் தேவைப்படுகிறது. இவ் ஆங்கிலம் சாரா மொழிகளுக்குரிய இணக்கத் தளமே மொழித்தளம் ஆகும்.
ஆங்கிலம் சாரா மொழிகளைக் கணியத்தில் பயன்படுத்தினால்
1. அம் மொழியைக் கணியத்தில் தட்டச்சு செய்வதற்கு வேண்டிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும்.
2. வாங்கிய எழுத்துருவில் தமிழைத் தட்டச்சு செய்வதற்கு அவ் எழுத்துரு வடிவமைப்பாளர் நிர்ணயித்த விசைப்பலகை ஒழுங்கை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
3. குறிப்பிட்ட எழுத்துருவையும், விசைப்பலகையையும் பயன்படுத்தித் தமிழை எங்கெல்லாம் தட்டச்சு செய்யலாம் என வடிவமைப்பாளர் நிர்ணயித்து உள்ளாரோ, அந்தப் பயன்பாடுகளில் மட்டுமே தட்டச்சு செய்யலாம்.
அதாவது ‘வானவில்’ போன்ற எழுத்துருவைப் பயன்படுத்தினால் தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை, தமிழ்99 விசைப்பலகை போன்ற விசைப்பலகை ஒழுங்குகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்தித் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும் வானவில் எழுத்துருவைப் பயன்படுத்தி எம்.எஸ்.ஆபிஸ் போன்ற பயன்பாடுகளில் மட்டுமே தமிழைத் தட்டச்சு செய்ய முடியும்.
4. குறிப்பிட்ட எழுத்துருவில் தட்டச்சு செய்த தமிழ் இயலை மின்னஞ்சலில் அனுப்பினால் அதைப் பெறுபவரிடம் அவ் எழுத்துரு இருந்தால் மட்டுமே அந்த மின்னஞ்சலைப் படிக்க முடியும்.
தமிழக முதல்வருக்குத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப விரும்பிய இந்தியப் பிரதமர் பாமினி எழுத்துருவில் தமிழில் தட்டச்சு செய்த வாழ்த்துச் செய்தியைத் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார் என வைத்துக் கொள்வோம்.
முதல்வர் அலுவலகத்தில் அந்த வாழ்த்துச் செய்தி படிக்க முடியாத வடிவில் கணியத்தில் காட்சி அளிக்கும். முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றுபவரோ “வானவில் எழுத்துருவில் வந்தால் மட்டுமே மின்னஞ்சலைப் படிக்க முடியும்” என்பார். பிரதமர் அலுவலகத்துக்கு ‘தயவு செய்து உங்கள் வாழ்த்துகளை வானவில் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்புங்கள்’ என்று உத்தரவிடவா முடியும்? இது போன்ற அவலம் இனி நேராது.
5. குறிப்பிட்ட எழுத்துருவில் தட்டச்சு செய்த இயலை நாம் விரும்பும் எழுத்துருவில் மாற்றி வடிவமைத்து அச்சிட முடியாது.
முதல்வர் அலுவலகத்திலிருந்து ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வருகின்றது. அதை உடனடியாக அடுத்த இதழில் வெளியிடவேண்டும். பத்திரிகையில் பயன்படுத்துவதோ முரசு எழுத்துரு, முதல்வரின் அஞ்சலோ வானவில் எழுத்துரு. அடுத்த நாள் இதழில் வெளியிட அதே அஞ்சல் செய்தியை முரசு எழுத்துருவில் மாற்றி மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டும். அவ்வாறு தட்டச்சு செய்தால் கால தாமதமாகிவிடும். அடுத்த நாள் இதழில் சேர்க்க முடியாது. அப்படியானால் என்னதான் செய்வது? இனி கவலை கொள்ளத் தேவையில்லை.
இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் அடியோடு தீர்த்து வைக்கிறது வரியுருமா.
வரியுருமா இருந்தால் :
1. எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யலாம்.
2. விசைப்பலகையை நீங்கள் விரும்பும் தட்டச்சு ஒழுங்கில் நீங்களே வடிவமைத்துப் பயன்படுத்தலாம்.
3. நீங்கள் விரும்பி வடிவமைத்த விசையொழுங்கில் வானவில், பாமினி, முரசு முதலான எல்லாத் தமிழ் எழுத்துருக்களிலும் தட்டச்சு செய்யலாம்.
4. எழுத்துரு இல்லாமலே படிக்கும் வடிவில் சென்றடையக் கூடியவாறு மின்னஞ்சல்களை யுனிக்கோட் வடிவில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.
5. வானவில் எழுத்துருவை பயன்படுத்துவோரைப்போல் அல்லாமல் எழுத்துருக் காரணமாகப் படிக்க முடியாத வடிவில் வரும் எந்த மின்னஞ்சலையும் வரியுருமா இருந்தால் படிக்கும் வடிவில் மாற்றிப் படிக்கலாம்.
6. எந்த எழுத்துருவில் வந்த செய்தியானாலும் நமக்கு வேண்டிய எழுத்துருவிற்கு மாற்றி வடிவமைத்து அச்சிடலாம்.
7. வானவில் போல் எம்.எஸ்.வேர்டு பயன்பாட்டில் மட்டும் அல்லாமல் பேஜ்மேக்கர் முதலான எல்லாப் பயன்பாடுகளிலும் வரியுருமா இருந்தால் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
8. மின்னஞ்சல் தளங்களிலும், இணையத் தேடலிலும், மின்னாடலிலும் (சாட்டிங்) கூட நேரடியாகத் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்.
விண்டோஸ் எனும் இயங்குதளத்துடன் கூடவே வரியுருமா எனும் மொழித்தளமும் இருந்தால் எந்தக் கணியத்திலும் தமிழை விருப்பம்போல் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.
நீங்கள் பயன்படுத்தும் வானவில் போன்ற எழுத்துருக்களையும் தமிழ் 99 விசைப்பலகை ஒழுங்கையும் இன்னும் பிற பயன்பாடுகளையும் அப்படியே தொடர்ந்து வரியுருமாவிலும் பயன்படுத்தலாம்.
|