வரியுருமா

பயன்பாட்டு எளிமையில் தலைசிறந்த தமிழ் மெல்லியம்


கணியத்தில் தமிழை பயன்படுத்துவதிலுள்ள அடிப்படைச் சிக்கல்கள் எல்லாவற்றிற்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கிறது.

இதுவரை வெளியிடப்பட்ட தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை முதலான முயற்சிகளால் தீர்க்கப்படாத எழுத்துரு, தட்டச்சு ஒழுங்கு போன்ற சிக்கல்களைத் 'தரப்படுத்தலே தேவையில்லை' என்ற நிலையில் முழுமையாகத் தீர்த்து வைக்கிறது.

தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை, ஒலியியல் விசைப்பலகை என எந்த விசைப்பலகை ஒழுங்கில் தமிழைத் தட்டச்சு செய்வது என்ற சிக்கல் இனி இல்லை. நீங்கள் விரும்பிய விசை ஒழுங்கை நீங்களே வடிவமைத்து தட்டச்சு செய்ய வழிகாட்டுகிறது வரியுருமா.

பூபாளம் எழுத்துருவுக்கு ஒரு விசைப்பலகை ஒழுங்கு, வானவில் எழுத்துருவுக்கு இன்னோர் விசைப்பலகை ஒழுங்கு, முரசு எழுத்துருவுக்கு வேறொரு விசைப்பலகை ஒழுங்கு என எழுத்துருக்கள் எத்தனை விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. வரியுருமாவைப் பயன்படுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த அல்லது வரையறுத்த விசைப்பலகை ஒழுங்கிலேயே எல்லா எழுத்துருக்களிலும் தட்டச்சு செய்யலாம்.
ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்ததை இன்னொரு எழுத்துருவில் அச்சிட முடியாது என்ற கவலையும் தேவை யில்லை. எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தாலும் அதை நீங்கள் விரும்பும் எழுத்துருவில், மாற்றித் தருகிறது வரியுருமா.

விருப்பம் போல மின்னஞ்சல் அனுப்புவதற்காக யுனிக்கோட் வடிவத்தில் தட்டச்சு செய்வதற்கென பிரத்தியேகமான கடிதத்தளம் வரியுருமாவில் இணைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு வந்த மின்னஞ்சல் படிக்க முடியாத வடிவத்தில் இருக்கிறதா? அது பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இது போன்ற மின்னஞ்சல்கள் எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து நீங்கள் எளிதில் படித்தறியுமாறு மாற்றித் தருகிறது வரியுருமா.

கணியம் பற்றிய அறிவு இல்லையா? அதற்காகவும் வருத்தப்படத் தேவையில்லை. விண்டோஸ் பற்றிய போதிய அறிமுகம் இல்லாதவரும் கூட கணியத்தில் நேரடியாக வரியுருமாவைத் திறந்து தட்டச்சு செய்தல் முதலான பணிகளைச் செய்யலாம். இதுவரை வெளியான எழுத்துருக்கள் மட்டுமல்ல, இனிவரும் எழுத்துருக்களையும் வரியுருமாவில் பயன்பாட்டாளரே இணைத்துக் கொள்ளுமாறு அமைந்து தன் பயன்பாட்டு எல்லையை, முடிவில்லாமல் விரித்துச் செல்கிறது 'வரியுருமா'.

எல்லாத் தெரிவும் தரமே
வரியுருமா ஒரு தரத்தெரிவு

வரியுருமாவில் மூன்று செயற்பாட்டியங்களும் ஒரு செயல்படுத்தலியமும் ஒரு சொன்னிகழ் மெல்லியமும் உள்ளன. மேலும் சிறப்பு இணைப்பாக பல எழுத்துருக்களும் வழங்கப்படுகின்றன.

செயற்பாட்டியங்கள் : 1. பார்க்கா 2. மாற்றா
3. கடிதா 4. ஓருலா

செயல்படுத்தலியம் : 1. சேர்க்கா

சொன்னிகழ் மெல்லியம் : 1. வடிவா

பார்க்கா
படிக்க முடியாத வடிவில் கணித்திரையில் தோன்றும் தமிழ் இயலை படிப்பதற்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறது பார்க்கா. அதாவது, இயல் வழங்கும் எழுத்துரு இல்லாமலே அந்த இயலைப் படிப்பதற்கு ஏற்ற வடிவில் மாற்றி வெளிப்படுத்துகிறது.

மாற்றா
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, எழுத்துருக்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட இயலை நாம் விரும்பும் வேறு பல எழுத்துருக்களுக்கு மாற்றித் தருகிறது மாற்றா.

கடிதா
பல்வேறு சீருருக்களையும் பயன்படுத்தி யுனிக்கோட் வடிவில், மின்னஞ்சல் செய்வதற்கு வேண்டியவாறு, இயலை இங்கு தட்டச்சு செய்து கொள்ளலாம். தட்டச்சு செய்வதற்கு நாம் விரும்பிய விசைக்கோலத்தை தேர்ந்தெடுத்து அல்லது சேர்க்கா மூலம் நாமே வடிவமைத்துப் பயன்படுத்தலாம்.

ஓருலா
ஆங்கில வழியில் அமைந்த பிற பயன்பாட்டு மெல்லியங்களிலும் இணையப் பயன்பாட்டிலும், மின்னஞ்சல், மின்னாடல் போன்றவற்றிலும் நேரடியாகத் தமிழைத் தட்டச்சு செய்து பயன்படுத்த வழிகாட்டுகிறது.

சேர்க்கா
பயன்பாட்டாளர் விரும்பும் எழுத்துருவையும் விசைக்கோல ஒழுங்கையும் வரியுருமாவில் இணைக்க வழி செய்கிறது சேர்க்கா.

விசை சேர்க்கா : புதிய விசைக்கோல ஒழுங்குகளைப் பயன்பாட்டாளரே வடிவமைக்க வழிகாட்டுகிறது.
எழுத்துரு சேர்க்கா : வரியுருமாவில் இணைக்கப்படாத எழுத்துருக்களை இணைக்கப் பயன்படுகிறது.

வடிவா
வடிவா இயல்களை உருவாக்கவும், வடிவமைக்கவும், சேமிக்கவும், அச்சிடவும் மற்றும் விரும்பிய எழுத்துருவுக்கு மாற்றவும் வல்ல சொன்னிகழ் மெல்லியம் ஆகும்.

 


© 2005 Kaniyatamil Software